செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலின் உபகோயிலான ருத்ரன் கோயிலின் அருள்மிகு அபிராமி நாயகி உடனுறை உத்தர கோடீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் உத்ரகோடீஸ்வரர் என அழைக்கப்படும் லிங்கம் சுயம்பாகத் தோன்றியதாகும்.
சிறப்புவாய்ந்த திருக்கோயிலில் குடமுழுக்கு நடத்த முடிவுசெய்யப்பட்டு உபயதாரர்கள் கிராம மக்கள் பங்களிப்புடன் திருக்கோயில் ராஜகோபுரம் சுவாமி அம்பாள் கோபுரம் தரைத்தளம் ஆகியவை சுமார் 50 லட்சம் ரூபாய் செலவுசெய்யப்பட்டு பல மாதங்களாகத் திருப்பணிகள், வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்றுவந்தன.
பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தப்பட்டது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 29ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
எட்டு யாக குண்டங்கள் உடன் பிரதான கலசங்கள் ஆதன நவகிரகங்கள், 1008 துணை கலசங்களைக் கொண்டு கடந்த நான்கு நாள்களாகப் பல்வேறு வேள்விகள் நடைபெற்றுவந்தன.
வேள்விகளுக்குப் பின்னர் கலசங்களுக்கு மகா தீபாராதனை உடன் நான்கு கால பூஜைகள் முடிவுற்றன. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கலசம் புறப்பட்டு விமானம் மூலவர், அம்பாள் சன்னிதான கோபுர விமானங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது.
பக்தர்களின் மீது கலச நீர் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம்செய்தனர்.