சென்னை: சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம்போல, நேற்று (நவ.9) காலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனிடையே சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறிப்பிட்ட ஒரு பெட்டியில் பயணம் செய்யும் நபர் ஒருவரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமான வகையில் உள்ளதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில், உதவி ஆய்வாளர் தேசி, ரயில்வே குற்றத்தடுப்பு மற்றும் கண்டுபிடிப்பு படையினர் ஆகியோர், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலின் குறிப்பிட்ட அந்த ரயில் பெட்டியை சோதனையிட்டுள்ளனர்.
அப்போது, அந்தப் பெட்டியில் பாதுகாப்பு படையினரைக் கண்டதும் குறிப்பிட்ட ஒரு நபர் பதற்றம் அடைந்துள்ளார். எனவே சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கொண்டு வந்த பையை போலீசார் சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் அந்தப் பையில் எந்த ஆவணமுமின்றி 10 லட்சம் ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அந்த நபரை ரயில்வே காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது ஹாசன் என்பவரது மகன் ஹாஜா மொய்தீன் (36) என்பது தெரிய வந்துள்ளது. பட்டதாரி இளைஞரான இவர், கிண்டியில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மேலும், இவர் மண்ணடியில் உள்ள மொய்லுதீன் என்பவரிடமிருந்து 10 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, சிதம்பரத்தில் உள்ள ஒரு நபருக்கு கொடுப்பதற்காக சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிதம்பரம் செல்வதாக கூறியுள்ளார். அதனையடுத்து ஹவாலா பணத்தோடு பிடிபட்ட அந்த நபரை, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரி பாலச்சந்திரனிடம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: சிங்கம் மீசை.. புல்லட் வாகனத்தில் மிடுக்காக வலம் வந்த போலி போலீஸ் கைது!