செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கம் ஆலம்பரைக் குப்பத்தைச் சேர்ந்தவர் சேகர் (29). சூணாம்பேடு அடுத்த பொன்னியநல்லூர் கிராமத்திலுள்ள நியாய விலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் (ஜூன் 19) கடை பக்கத்திலிருந்து மின்சாதன பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது பூமிகுப்பம் பகுதியிலிருந்து லோகநாதன் (23) மற்றும் பாண்டியன் (30) ஆகிய இருவரும் எதிர்திசையில் கடப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மீன் மார்க்கெட் அருகே வந்தபோது இரு வாகனங்களும் நேருக்கு நேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சேகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சேகர் குடும்பத்தினர் சூனாம்பேடு காவல் நிலையத்தில், சேகர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை வழக்கு பதிவு செய்யும்படியும் முறையிட்டுள்ளனர். ஆனால், காவல் துறையினர் அது விபத்து வழக்கு மட்டுமே என கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இறந்த சேகரின் உடல் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததால் அதிருப்தியில் இருந்த சேகர் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் 500க்கும் மேற்பட்டோர் சேகரின் ஈமச்சடங்கிற்குப் பிறகு அவரது உடலை அங்கு இருந்து எடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை சமரசம் செய்ததோடு, உடற்கூறாய்வு அறிக்கை வந்தபின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர். அதன்பிறகு சேகரின் உடல் இறுதிச் சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.