செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அச்சிறுப்பாக்கம் ஒன்றிய அதிமுக கட்சி கூட்டம் நடைப்பெற்றது.
இதில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்காக, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வந்திருந்தார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன், அமைச்சரின் கார் புறப்பட்டு, மதுராந்தகம் செல்லும் மார்க்கமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
இந்தநிலையில், பாமக ஆர்ப்பாட்டத்திற்கு, செஞ்சி அடுத்த முக்கூரிலிருந்து வந்திருந்த ஒரு வாகனத்தையும், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த ஒரு வாகனத்தையும் காவல்துறையினர் தடுத்து வைத்தாக தெரிகிறது.
காலைமுதல் தங்களை அனுப்பச் சொல்லி, பாமகவினர் கேட்டும், அச்சிறுப்பாக்கம் காவல்துறையினர், மாலைதான் அனுப்ப முடியும் எனக் கூறி காவலில் வைத்திருந்தனர். அப்போது அமைச்சரின் கார் அச்சிறுப்பாக்கத்தை விட்டு புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து கொண்டிருப்பதாக அறிந்த பாமகவினர் அவரது காரை வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் இருபுறமும் வரிசை கட்டி நின்றன.
மதுராந்தகம் காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விரைந்து வந்த காவல்துறையினர், பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அமைச்சரின் காரை விடுவிடுத்தனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சரின் கார் மறிக்கப்பட்ட சம்பவம் அச்சிறுப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.