தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதற்கு பல எதிர்ப்புக் குரல்கள் வலுத்துள்ளன. காவல்துறையினர் மீதான வெறுப்புணர்வும் மக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால், காவல்துறையினருக்கு அரசின் சார்பில் மன அழுத்தத்தை போக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து ப்ரண்ட்ஸ் ஆப் காவல் படைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவலர்களுக்கு உயர் அலுவலர்கள் மக்களிடம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சரகத்திற்குட்பட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆலோசனைகளை வழங்கினார்.
இதில், "வாகன ஓட்டிகளின் வழக்குகள் பொது இடங்களில் விசாரணை செய்யும் போது மக்களிடம் தன்மையாக பேச வேண்டும். மிகக் கடுமையாக காவல்துறை நடந்து கொள்ளக்கூடாது. மற்றவர்கள் காவலர்களை பார்த்து ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். காவல் சீருடையை பார்த்தால் அவர்களுக்கு பயத்தை விட மரியாதை வர வேண்டும்.
கரோனா காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அவர்களுக்கு முகக்கவசம், தகுந்த இடைவெளி பற்றி எடுத்துரைப்பது நமது கடமை. அதேநேரத்தில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணி எப்போது முடியும்? - முதலமைச்சர் ஆலோசனை