செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், மாணவ மாணவிகளுக்கு இடையே போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு பரப்புரை காவல்துறையினரால் நடத்தப்பட்டது. போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் ரீதியான மன ரீதியான பிரச்னைகள் குறித்து மாணவ - மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போதைப் பொருட்கள் பயன்பாடு சமூகத்தில் எத்தகைய தீங்கு விளைவிக்கும் என்பது பற்றியும் விளக்கிக் கூறப்பட்டது.
கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பரத், போதைப்பொருள் விற்பது பற்றி மாணவ மாணவிகளுக்கு தெரிந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க பள்ளி வளாகத்திலேயே ’மை போஸ்ட் மை ரைட்’ என்ற புகார் பெட்டி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதில் ’இது போன்ற குற்றங்கள் நடைபெறுவது குறித்து தங்களுக்கு தெரிந்த விவரங்களை மாணவ மாணவிகள் புகாரில் எழுதி சமர்ப்பிக்கலாம்’ என்று கூறினார்.
மேலும் புகார் தெரிவிப்பவரின் பெயர் முக்கியமல்ல என்றும், பெயர் இருந்தாலும் வெளியில் தெரிவிக்கப்பட மாட்டாது என்றும் காவல் துறையினர் ரகசியமாக நடவடிக்கை எடுத்து அத்தகைய குற்றங்களைக் களைவர் என்றும் மாவட்ட காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் பரத் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி ’எந்த பிரச்னையாகினும் மாணவ - மாணவிகள் 1098 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அந்தப் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல் துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் வடிவேல் முருகன், பள்ளி நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:'திரையுலகத்தின் கதாநாயகன் சட்டப்பேரவையில் இருக்கின்றார்'; கடம்பூர் ராஜூ