செங்கல்பட்டு: திருப்போரூர் பேரூராட்சியில், 2018ஆம் ஆண்டு 53 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடைப் பணி தொடங்கப்பட்டது. இதற்காக, சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கும் பணி நடந்துவருகிறது.
சாலையில் தோண்டிய பள்ளத்தை முறையாக மூடாததால், பள்ளங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதற்கிடையில் பணிகளும் தாமதமாக நடைபெறுவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்காகவே மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி உயர் அலுவலர்கள் அவ்வப்போது அப்பணிகளைப் பார்வையிட்டுவருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பாதாள சாக்கடைப் பணிகளை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் நேரில் ஆய்வுமேற்கொண்டனர்.
பாதாள சாக்கடைப் பணி
காலவாக்கம் பகுதியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையம், கழிவுநீரை சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடு குறித்து அனைத்து விவரத்தையும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர். விடுபட்ட ஐந்து வார்டுகளிலும் பணி மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் திருப்போரூர் நகர, ஒன்றியப் பகுதியின் வெற்றி வாய்ப்பு குறித்து உடனிருந்த தா.மோ.அன்பரசன், கட்சி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து ஓ.எம்.ஆர். சாலை, இள்ளலூர் சாலையில் நடைபெறும் பணிகளையும் ஆய்வுமேற்கொண்டார்.
பாதாள சாக்கடைப் பணியினை இன்னும் ஒன்பது மாதத்தில் முடிக்கவும், விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அமைச்சர் கே.என். நேரு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மணப்பாறை மணல் கடத்தல் விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்