தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை களைகட்டத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளுக்காக தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகள் மாவட்டங்கள், ஒன்றியங்கள், நிர்வாக அமைப்புகளில் மாற்றத்தை கொண்டு வருகின்றன.
ரஜினி கட்சி ஆரம்பிக்கிறார்
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் ஒருபுறம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, வருகின்ற ஜனவரியில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக ரஜினிகாந்த் கூறியிருப்பதும் தமிழ்நாடு அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது. மே மாதம் வரவிருக்கின்ற தேர்தலுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று(டிச.19) முதல் தனது பரப்புரையை தொடங்கியுள்ளார்.
பாஜகவில் இணையும் மு.க. அழகிரி?
இது ஒருபுறமிருக்க எந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும், எந்தக் கூட்டணி நிலைக்கும், எது சிதறும் என்ற விவாதங்களும் தொடங்கியுள்ளன. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பெயரும் அடிபடுகிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியிருந்த மு.க. அழகிரி, தேர்தல் நெருங்குவதையொட்டி தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருவதாக, சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
திடீரென முளைத்த சுவர் விளம்பரம்
இவர் மீண்டும் திமுகவில் இணைந்து செயல்படுவாரா, தனிக்கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்குவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாஜகவில் இணையப் போவதாகவும், இவரைக் கட்சியில் சேர்ப்பதற்கு பாஜகவும் காய் நகர்த்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மு.க.அழகிரி பேரவை என்ற பெயரில் திடீரென முளைத்துள்ள சுவர் விளம்பரங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சா நெஞ்சர் அண்ணன் மு.க.அழகிரி
கலைஞரின் மகனே, அஞ்சா நெஞ்சர் அண்ணன் மு.க.அழகிரி என்ற வாசகம் பாலத்தின் சுவற்றில் இடம்பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் திமுகவின் சார்பாக கடந்த காலங்களில் கோலோச்சி வந்த மு.க. அழகிரிக்கு, வட மாவட்டங்களில் அமைப்பு ரீதியான பலமோ, ஆதரவாளர்களோ சொல்லும் அளவிற்கு கிடையாது. பல ஆண்டுகள் அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்த மு.க. அழகிரிக்கு வட மாவட்டங்களில் பேரவைகள் உருவாக்கியிருப்பது திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'எடப்பாடி அதிமுக எஃகு கோட்டை' ஒட்டுமொத்த திமுகவும் பரப்புரை செய்தாலும் வெற்றி பெறாது' முதலமைச்சர்