செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சித்தாமூரில் "இல்லம் தேடி செல்லும் கோவிட் தடுப்பூசி" திட்டத்தின் கீழ், நடமாடும் கரோனா தடுப்பூசி முகாம்களை, இன்று (நவம்பர் 2) தமிழ்நாடு சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளுக்கும் சென்று, கரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும். இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், பொலம்பாக்கம் பகுதியிலுள்ள தொழு நோயாளிகள் சிறப்பு மருத்துவ முகாமைப் பார்வையிட்டார்.
அதன் பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், " பல ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தை, மருத்துவப் பயன்பாட்டிற்கான பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு கரோனா தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்படும்'' என்றார்.