செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் கூட்ரோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (செப்.28) இரவு நடைபெற்றது. அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டமாக இந்த கூட்டத்தை அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கூட்டம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறுவதாக சில நாட்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், பல எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்புச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான கோகுல இந்திரா கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி என்னாச்சு?.. மனம் திறந்த ஓபிஎஸ்!
இதனையடுத்து மேடையில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் கொஞ்சம் கூட உட்கட்டமைப்பு வசதி இல்லாத பாஜக, இதுவரை அதிமுகவின் தோளில்தான் ஏறி சவாரி செய்து வந்தது. அதிமுகதான் பாஜகவை தமிழக சட்டமன்றத்திற்கு அறிமுகப்படுத்தியது. அப்படி இருக்கையில், ‘2026இல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும் என பேசவா நான் பாஜக தலைவராக வந்துள்ளேன்’ என்று அண்ணாமலை கூறுவதை அதிமுக எப்படி ஏற்றுக் கொள்ளும்?
பாஜகவின் தமிழகத் தலைவராக அண்ணாமலை வந்த உடனே, அவர்கள் கட்சியிலேயே பல பேரை அவர் தூக்கி அடித்துள்ளார். அப்படி இருக்கையில், அதிமுகவில் யார் யார் சேர வேண்டும் என்று அவர் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. ஒன்றாக இணையும்படி கூறுவதெல்லாம் அண்ணாமலையின் வேலை கிடையாது.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக முடிவெடுக்கவில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட கட்சியின் அனைத்து மட்டத்திலிருந்தும் ஆலோசனையை அவர் கேட்டவுடன், இதற்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம் என்று கூறி, பாஜகவுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று ஏகமனதாக நாங்கள் தெரிவித்தோம்.
நாடாளுமன்றத் தேர்தலை தனியாகவேச் சந்திப்போம். தமிழக மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ, அந்த சமயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுத்து செயல்படுவார்கள்” என்று பேசினார்.
இதையும் படிங்க: ரூ.2000 செல்லாது எதிரொலி! திருச்செந்தூர் கோயில் உண்டியல் திறப்பு! காணிக்கையாக ரூ.2 கோடி வசூல்!