செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மதுராந்தகம், வில்வராயநல்லூர், முதுகரை உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.
தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலாலும் நெல்வரத்து அதிகமாக இருப்பதாலும் கொள்முதல் நிலையங்களில் அதிகமாக நெல் தேக்கம் அடைகிறது. ஒரு நாளைக்கு 300 முதல் 500 மூட்டைகள்தான் ஒவ்வொரு நிலையத்திலும் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அலுவலர்களின் கட்டளையால், அதிக அளவில் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் ஏற்படுகிறது.
இந்த நிலை இப்படியே நீடித்தால் சுமார் மூன்று மாத காலத்திற்கு மேலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர். அலுவலர்களிடம் கால தாமதத்திற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது நெல் பிடிக்கப்படும் கோணிப்பை பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது மழைப் பெய்து வருவதால், நெற்பயிர்கள் மழையில் நனைந்து நாசமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இப்பகுதிகளுக்கு சென்று நேரிடையாக ஆய்வு நடத்திய மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியிடம் விவசாயிகள் தங்கள் கோரிக்கையை கண்ணீர் மல்க எடுத்துரைத்தனர்.
இதையும் படிங்க: மழையால் வீணாகும் நெல் மூட்டைகள்: விவாசியகள் வேதனை