செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் குமார் என்பவருக்கும் பொது வழி பிரச்னை இருந்து வந்தது.
செங்கரடில் குமார் சில பிளாட்டுகளை விற்றுவந்தார். அவரது பிளாட்டுக்குச் செல்லும் பாதையில் பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இதயவர்மனுக்கும் குமாருக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து பிரச்னைக்குரிய இடத்தில் கால்வாய் அமைப்பது குறித்து இருவருக்குமிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆரம்பித்த பிரச்னை நேற்று கைகலப்பாக மாற, குமார் தரப்பினர் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி உள்பட இதயவர்மனின் தரப்பினரை தாக்கியுள்ளனர்.
இதையடுத்து லக்ஷ்மிபதி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குமார் தரப்பினரை சுட முயன்றுள்ளார். இதில் குண்டு தவறி அப்பகுதி வழியே சென்ற ஸ்ரீனிவாசன் மீது பாய்ந்தது. இதையடுத்து சீனிவாசன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் குமாரின் இன்னோவா கார் கண்ணாடி, காரின் முன்பக்கத்திலும் குண்டு பாய்ந்தது. காயம் ஏற்பட்டதாக கூறப்படும் குமார், பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சம்பவ இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் விசாரணை மேற்கொண்டார்.
குமார் தரப்பினர் வந்த மூன்று இருசக்கர வாகனங்களை இதயவர்மன் தரப்பினர் தீ வைத்து கொளுத்தினர். நேற்று இரவு (ஜூலை 11) திருப்போரூர் காவல்துறையினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குமாரை விசாரணை நடத்தினர். துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்ட காரையும் ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்தனர்.
இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது லக்ஷ்மிபதியின் ஒரு கை துப்பாக்கி, ஒரு நாட்டு துப்பாக்கி என இரு துப்பாக்கிகளையும் இரண்டு குண்டுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தார். இச்சம்பவத்தில் சுமார் 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இரு துப்பாக்கிகளும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் காலாவதியானது விசாரணையில் தெரியவந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரு துப்பாக்கிகளையும் சம்பவ இடத்திற்கு திட்டமிட்டு கொண்டு சென்றுள்ளனரா என்பது விசாரணையில் தெரியவரும் எனவும் கண்ணன் தெரிவித்தார். தான் துப்பாக்கியால் சுட்டதாக லக்ஷமிபதி வாக்குமூலம் அளித்ததாகவும் கண்ணன் குறிப்பிட்டார். இதையடுத்து இதயவர்மன் மீது 147, 148, 342, 323, 307 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதயவர்மனும் அவரது தரப்பைச் சேர்ந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.