திமுக தலைவர் ஸ்டாலின் தனது 68வது பிறந்தநாளை இன்று (மார்.1) கொண்டாடுகிறார். ஸ்டாலின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளாக திருக்கழுக்குன்றத்தில் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட லியோனி பேசியதாவது :
”அதிமுக எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், அதனை செயல்படுத்தும் தலைவராக ஸ்டாலின் மட்டுமே இருப்பார். விவசாயிகள், பொதுமக்கள், மகளிர்க்கு நலன்களை செய்யக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு உதாரணமாக சமீபத்தில் காவல்துறை பெண் உயர் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு எந்தவித நலத்திட்டங்களையும் தரப்போவதில்லை. தேர்தலுக்காக மட்டும் இலவச, நலத்திட்ட உதவிகள் வழங்கும் ஒரே அரசு அதிமுக. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே விவசாய கடன் தள்ளுபடி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என அறிக்கைகளை வெளியிட்டது குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் தந்திரமாகும். ’தேர்தலை கண்டு, தலையில் துண்டு’ போட்டு மூலையில் உட்காரும் நிலையில் இருக்கிறார் முதலமைச்சர்” என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தாமு அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன், திருக்கழுக்குன்றம் பேரூர் கழக செயலாளர் யுவராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மணி, பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட நக்ஸல் சரண்!