செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளாக, திருப்போரூர், மாமல்லபுரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, வண்டலுார், தாம்பரம் போன்ற பகுதிகள் உள்ளன. குறிப்பாக, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுப்பேடு துவங்கி, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்துார், மதுராந்தகம், கருங்குழி, படாளம், மாமண்டூர், செங்கல்பட்டு, சிஙகபெருமாள் கோவில், மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், என போக்குவரத்து நெரிசல் வாய்ந்த பகுதிகள் வரிசை கட்டி நீள்கின்றன.
தென்மாவட்டங்களோடு சென்னையை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையாக இந்த சாலை இருப்பதால், எப்போதும் போக்குவரத்து மிகுந்திருக்கும். பேருந்துகள், லாரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கிலான வாகனங்கள் இந்தச் சாலையில் பயணிக்கின்றன. இவ்வளவு நெரிசலும், முக்கியத்துவமும் வாய்ந்த இந்தப் பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் சரிவர இயக்கப்படாமல் அலட்சியம் காட்டப்படுவது விபத்துகளுக்கு வழிவகுப்பதாகவே உள்ளது.
மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள நெடுஞ்சாலையை தினந்தோறும் ஆபத்தான முறையில் பலர் கடக்கின்றனர். இந்த இடத்தில் இருசக்கர வாகனங்கள், பாதசாரிகள் குறுக்கு புகுந்து சாலையைக் கடப்பதைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கையாக உள்ளது. மதுராந்தகம் பைபாஸ் பேருந்து நிறுத்தத்திலும் இதே நிலைதான். பேருந்தை விட்டு இறங்குவோரும், பேருந்தில் ஏற வருவோரும், அபயகரமாக சாலையைக் கடக்கின்றனர். இந்த இடத்தில் போக்குவரத்து சிக்னல் அமைப்பது சாத்தியமில்லை என்றாலும், எச்சரிக்கை விளக்குகளை அமைக்கலாம்.
மதுராந்தகம் நகரின் உள்ளே, பொது மருத்துவமனை சந்திப்பு, தேரடித் தெரு சந்திப்பு போன்ற இடங்களும் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களாக உள்ளன. இங்கு போக்குவரத்து சிக்னல்களே கிடையாது. இதனால், எப்போதும் இங்கு நெரிசல் ஏற்படுவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.
கருங்குழி பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் காட்சிப் பொருளாகத்தான் உள்ளது. அடுத்து வரும் படாளம் கூட்ரோடிலும் இதே கதைதான். முக்கிய சந்திப்பான இங்கு எந்தவித சிக்னல்களும் இல்லாததால், வாகனங்கள் குறுக்கும் நெடுக்கமாக அபயகரமாகச் செல்லும் நிலை காணப்படுகிறது. செங்கல்பட்டு நகரின் மத்தியில் உள்ள பேருந்து நிலையம் எதிரே உள்ள சிக்னல் பாழடைந்து கிடக்கிறது.
செங்கல்பட்டு நகரிலிருந்து சென்னை செல்வதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சாலை மிக அபயகரமாக உள்ளது. நுாற்றுக் கணக்கில் வெளியேறும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களோடு இணைய படாதபாடு பட வேண்டியுள்ளது. சிங்கபெருமாள் கோவிலில், பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் இருந்தும் இல்லாத நிலைதான். இங்கும் போக்குவரத்து காவலர்கள்தான் பணியில் உள்ளனர். ஆனாலும், தேசிய நெடுஞ்சாலை என்பதால் மிகுந்த சிரமத்திற்குட்பட்டே இவர்கள் பணி செய்ய வேண்டியுள்ளது. பழமத்துார் சந்திப்பில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து சிக்னலால் எந்த வித பயனும் கிடையாது என்பது கண்கூடாகத் தெரிகிறது.
மொத்தத்தில் இந்தப் பகுதிகளின் வழியாகப் பயணிக்கும் வாகனங்களால், விபத்துகள் ஏற்பட்டு வருவதும், இனியும் ஏற்படாமல் தவிர்க்கப்படுவதும் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கையில்தான் உள்ளது என்பதே உண்மை. நில், கவனி, செல் என்பது மாறி, நில், கவனி ஆனால் செல்லாதே, சென்றால் விபத்தில் மாட்டுவாய் என்றளவில்தான் போக்குவரத்து சிக்னல்களின் நிலை காணப்படுகிறது.
இதையும் படிங்க: போக்குவரத்து போலீசாருக்கு புதிய எல்.இ.டி., கைக்கருவிகள் வழங்கல்!