செங்கல்பட்டு: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக ரவுடிகளின் அட்டகாசங்கள் இருந்துவருகின்றன. குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலும், அதிகளவில் பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள், உள்நாட்டு தொழிற்சாலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன.
மாநில அளவில், இந்திய அளவில், வேலைவாய்ப்புகளையும் பணப்புழக்கத்தையும், இந்தத் தொழிற்சாலைகள் உருவாக்கிவருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரத்தில், இந்தத் தொழிற்சாலைகளில், அந்தந்த உள்ளூர் அரசியல் செல்வாக்கு மிக்க ரவுடிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்து, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கிற்கே சவால்விட்டு வருவதும் நடந்துவருகிறது.
இந்தச் சூழ்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொடி கட்டிப் பறக்கும் ரவுடிகளை, தற்போது தமிழ்நாடு அரசு குறிவைத்து வேட்டையாடிவருகிறது. இதற்காக, சரக டிஐஜி சத்திய பிரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். மேலும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைத்துரை தலைமையில் தனியாக ஒரு சிறப்புப் படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரவுடிகளும், ரவுடிகளுக்குத் துணைபோகும் காவல் துறையினரும், மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என மாவட்ட எஸ்பி அரவிந்தன் கடும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இது குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அவர் சிறப்புப் பேட்டியளித்துள்ளார்.
அதில், “மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை 150-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு, உள்நாட்டுத் தொழிற்சாலைகள் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் எந்தவிதமான ரவுடியிச தலையீடுகளும் இல்லாமல், மாவட்ட காவல் துறை தொடர்ந்து கண்காணித்துவருகிறது. பழைய குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
இதில் மாவட்ட காவல் துறையைத் தொடர்புகொண்டு, தாங்கள் திருந்தி வாழ விரும்புவதாக பல குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு, திருந்த கால அவகாசம் அளித்து, மாவட்ட காவல் துறை தொடர்ந்து கண்காணித்துவருகிறது. அதேபோல தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருபவர்களையும் காவல் துறை கவனித்துக் கொண்டுவருகிறது.
தொழிற்சாலைகளின் நிர்வாகிகளுக்கு, மாவட்ட காவல் துறை சார்பாக, எந்தவிதமான மிரட்டல்களுக்கும் அடிபணிய வேண்டாம். அப்படி மிரட்டல்கள் வந்தால், காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல ரவுடிகள், பல்வேறு குற்ற வழக்குகள் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, அரசியல், தொழில், சாதி சம்பந்தப்பட்ட எந்த ரவுடியிசமும் தலைதூக்க, மாவட்ட காவல் துறை அனுமதிக்காது. அவ்வாறு சட்டத்தை மீறுபவர்களை இரும்புக்கரம் கொண்டு, கட்சிப் பாகுபாடின்றி காவல் துறை அடக்கும்” என எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி மோசடி செய்த 15 பேர் கைது