இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாள்தோறும் 2,600 ஆக பதிவானது. தற்போது படிப்படியாகக் குறைந்து நேற்று 840 ஆக பதிவு ஆனது.
அதேபோல் 451 ஆக இருந்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 70 ஆக குறைந்துள்ளன. எனினும் கரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி புதிய தளர்வுகள் செயல்பாட்டில் உள்ளன. சில கடைகள் திறக்கப்பட்டன. சில அலுவலகங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன. சில தொழிற்சாலைகளும் விதிககுளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன.
இந்தத் தளர்வுகள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக் போடப்பட்ட தளர்வுகள் தவிர, நோய் குறைந்துவிட்டது என்ற ஒரு அலட்சியத்தில் பொதுமக்கள் இருக்க வேண்டாம். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் நான்கு ஏக்கர் அளவில் தற்காலிக மார்க்கெட் செயல்பட தாம்பரம் நகராட்சி ஆணையர், வருவாய் கோட்டாட்சியர் இடம் ஒதுக்கியுள்ளனர்.
முன்பு தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்தது போல் தற்போதும் செயல்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் பொதுமக்களுக்கும் சிரமம் இருக்காது, வியாபாரிகளுக்கும் சிரமம் இருக்காது. அதனால் தேவையின் அடிப்படையில் எத்தனை வாகனங்களுக்கு அனுமதி தேவைப்படுகிறதோ அதனை வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்தார்.