சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்தப் பள்ளியை நடத்திவருகிறார்.
சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் அடுக்கடுக்காகப் பாலியல் புகார்களை முன்வைத்தனர். இதுதொடர்பாக அவர் நேரில் முன்னிலையாகுமாறு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால், சிவசங்கர் பாபா முன்னிலையாகாமல் நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்டில், டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியதாகவும் தகவல் வெளியானது.
தொடர்ந்து, டேராடூன் சென்ற சிபிசிஐடி தனிப்படை காவல் துறை, நேற்று(ஜுன் 16) சிவசங்கர் பாபாவைக் கைது செய்து, இரவோடு இரவாக சென்னை அழைத்து வந்தது. அவரிடம் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர் இன்று(ஜுன்.17) செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நீதிமன்ற காவலுக்குப் பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'என்னது பிரியாணி பிடிக்கலையா...' வாடிக்கையாளர்களுக்கு அடி உதை