செங்கல்பட்டு: மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசுப்பள்ளியில், மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுபா நித்ரா என்ற மாணவி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை (ஜூலை 21) வழக்கம்போல் பள்ளிக்குச்சென்ற மாணவி, திடீரென பள்ளியின் மாடியில் இருந்து கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மாணவியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி இடுப்பு எலும்பு முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்ற மாமல்லபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசுப்பள்ளி மாணவி ஒருவர் அதேபோல் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு வாட்ஸ்அப் மூலம் போராட்டம் நடத்த முயன்ற 2 பேர் கைது!