11,12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியின் போது நியமிக்கப்படும் ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.அதில் "அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்ட கால அட்டவணைப்படி உரிய தேதியில் முகாம் அலுவலர், தொடர்பு அலுவலர்கள் பொறுப்பேற்க வேண்டும். முகாம் அமையும் பள்ளிகளில் தடைசெய்யப்பட்ட பகுதிஎன்ற வாசகங்கள் நன்கு தெரியும்படி ஒட்டப்பட வேண்டும்.
முகாம் தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் பிற பணிகளுக்குத் நம்பிக்கைக்குரிய, நேர்மையான, எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத ஆசிரியர், பணியாளர்களை நியமனம் செய்து, நியமன ஆணையினை வழங்க வேண்டும். விடைத்தாள் மதிப்பீடு செய்ய காற்றோட்டமான அறைகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.
முகாமில் பணிபுரியும் அனைத்து நிலைப் பணியாளர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும். மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர், அட்டவணையாளர் மற்றும் முகாம் எழுத்தர் போன்ற பிற பணியாளர்கள் விடைத்தாள் மதிப்பீடு நடைபெறும் அறைக்குச் செல்லக்கூடாது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியானது அரசுத் தேர்வுத் துறை இயக்ககத்தால் வரையறுக்கப்பட்ட கால இடைவெளிக்கு முன்னர் நிறைவு பெற்றால்ஆசிரியர், பணியாளர்களை உடனடியாக உரிய வருகைச் சான்றிதழுடன் முறையாக பணி விடுவிப்பு செய்துவிட வேண்டும்.
மதிப்பீடு செய்யப்பட்ட 11,12ஆம் வகுப்புவிடைத்தாள்கள் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதிலிருந்து மூன்று மாதங்கள் வரை முகாமிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். அந்தகால இடைவெளிக்குள் விடைத்தாள்களை முகாமிலிருந்து வேறு எந்த பள்ளிகளுக்கும் மாற்றம் செய்யக் கூடாது.
அதை மாற்றம் செய்வதற்கான அதிகாரம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தவிர வேறு யாருக்கும் கிடையாது. விடைத்தாள்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய முழுப்பொறுப்பும் முகாம் அலுவலர்தான் ஏற்க வேண்டும்.
மேலும் பாடவாரியாக, மொழிவாரியாக பெறப்பட்ட விடைத்தாள்களின் எண்ணிக்கையினை உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி மற்றும் கணினியில் மதிப்பெண் ஏற்றப்பட்ட விடைத்தாள்கள், முகாம் அலுவலர் பாடவரியாக, கட்டு எண்ணிக்கை வாரியாக அடுக்கி பாதுகாக்கப்பட வேண்டும்.
முகாம் அலுவலர் தனது முகாமிற்கு பெறப்பட்டுள்ள பாடவாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான முதன்மைத் தேர்வாளர்கள் (விடைத்தாள் திருத்தியதில் அனுபவம் வாய்ந்த மூத்த முதுகலை ஆசிரியர்), கூர்ந்தாய்வு அலுவலர்கள் (மூத்த முதுகலை ஆசிரியர்), உதவித்தேர்வாளர்களுக்கான நியமனம் செய்துள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
உதவித் தேர்வாளர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மேல்நிலைக் கல்வி பாடங்களை கற்பித்தவராக இருத்தல் வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
உதவித் தேர்வாளர்கள் நியமனத்தில் முகாம் அலுவலர்கள் கவனம் செலுத்தாத காரணத்தினால் கடந்த ஆண்டு மறுமதிப்பீடு,மறுகூட்டலின்போது உயர் நீதிமன்றத்தில் அதிக வழக்குகளை தேர்வுத் துறை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. எனவே தகுதிவாய்ந்த அனைத்து ஆசிரியர்களையும் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த 11, 12ஆம் வகுப்பு பாடங்களைகற்பிக்கும்அனைத்து முதுகலை ஆசிரியர்களையும் அந்தந்த விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு அனுப்புமாறு அறிவுறுத்த வேண்டும்.
மேலும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படும்கணினி அறையில்செல்போன் பேசுவதை முற்றிலும் தவிர்த்திடும் வகையில் முகாம் அலுவலர் நேரடியாக கண்காணிக்க வேண்டும்.
உதவித் தேர்வாளரால் மதிப்பீடு செய்யப்படும் அனைத்து விடைத்தாள்களிலும் எந்த பதிலும் விடுபடாமல் விடைக்குறிப்பின்படி திருத்தப்பட்டுள்ளதை சரிபார்க்கும் முழுப்பொறுப்பும் முதன்மைத் தேர்வாளருக்கே உரியது.
எனவே மதிப்பீடு செய்யப்படாத விடைகள், ஏதேனும் விடைத்தாள் நகல் பெறும்போதோ அல்லது மறுகூட்டலின் போதோ கண்டறியப்படின் முதன்மைத் தேர்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவித் தேர்வாளர்களிடம் முழுமையாக மதிப்பீட்டுப் பணிக்கு விடைத்தாள்களை முழுமையாக மதிப்பீடு செய்துதரும் முழுப்பொறுப்பும் முதன்மைத் தேர்வாளருக்கே உரியது.
தமக்கு ஒதுக்கீடு செய்யப்படாத உதவித் தேர்வாளர் (முதுகலை ஆசிரியர்) தம்மிடமோ அல்லது தம் குழுவிடமோ மதிப்பீட்டுப் பணியின்போது தேவையில்லாமல் வந்துபேசுவதை ஒவ்வொரு முதன்மைத் தேர்வாளரும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்" உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.