தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தண்ணீர் பிரச்னை காரணமாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிக்களுக்கும் அனுப்பியுள்ளது.

அதில், சில தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை எனத் தெரிவித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதாக தகவல் வெளியாகிறது. இவ்வாறு செயல்படுவது விதிகளுக்கு முரணானது என்று தெரிவித்துள்ளது. மேலும், அப்படி குடிநீர் வசதியில்லாத தனியார் பள்ளிகள், உரிய மாற்று ஏற்பாடுகள் செய்து பள்ளியை நடத்த வேண்டும். அப்படி செயல்படத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.