சிவகங்கை பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அவ்வப்போது வேலை நிமித்தமாக சென்னைக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஐ.சி.ஆர் டிராவல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து காரை வாடகைக்குப் பெற்றுக் கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. பின்பு அந்நிறுவனத்தின் உரிமையாளர் முனியன் என்பவரிடம் நட்பாகியுள்ளார். உசேனிடம் தொடர்பிலிருந்த முனியன், சென்னைக்கு வரும் பல அரசியல் தலைவர்களுக்கு தான் ஓட்டுநராக பணிபுரிந்திருப்பதாகவும், இதனால் பல அமைச்சர்களை தனக்குத் தெரியும் எனவும் கூறியுள்ளார்.
இதனால் ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தால் உங்கள் மகனுக்கு மின்சாரத் துறையில் இளநிலைப் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக முனியன் சொல்லியிருக்கிறார். இதை நம்பி பணத்தைத் திரட்டிய உசேன், முனியன் கையில் ஐந்து லட்சத்தைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட முனியன், இன்னும் மூன்று மாதத்தில் உங்கள் மகனுக்கு பணி நியமன ஆணைக் கடிதம் வந்து சேரும் என உறுதியளித்துள்ளார்.
நம்பி சென்ற உசேன், மகனுக்கு மூன்று மாதத்திற்குப் பிறகும் கடிதம் வராததால் முனியனைத் தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார். சரியான முறையில் பதிலளிக்காத முனியனை நேரடியாகக் காண சென்னைக்கு வந்திருக்கிறார் உசேன். வந்து விசாரித்த பின்புதான், முனியனிடம் தான் ஏமாந்ததை உணர்ந்திருக்கிறார் உசேன். மேலும், முனியன் மீது பல மோசடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தன் பணத்தை மீட்டுத் தரக்கோரிக் காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகாரளித்து, முனியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.