இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் இருந்த பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பழம் பெருமைவாய்ந்த அபூர்வ சிலைகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், 2012ஆம் ஆண்டு சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக பொன். மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டார். வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதிலும், அதில் தொடர்புடையவர்களை கைது செய்வதிலும் பொன். மாணிக்கவேல் தீவிரம் காட்டினார்.
மேலும், சிலைகள் தயாரிக்கப்பட்டதில் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும் அவர் அம்பலப்படுத்தினார். அதிரடியாக பல சிலைகளை மீட்டு பெரும்புள்ளிகள் பலரை பொன். மாணிக்கவேல் கைது செய்து வந்த நிலையில் அவரை ரயில்வே துறைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணையை முடக்கும் விதமாகவே இந்த உத்தரவை அரசு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து தலையிட்டு சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை பொன். மாணிக்கவேலே விசாரிப்பார் என தெரிவித்தது.
இதனையடுத்து, அந்த வழக்குகளை பொன். மாணிக்கவேல் விசாரித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீர சண்முகமணி, அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உள்ளிட்ட பல்வேறு அலுவலர்களைக் கைது செய்தார். இந்நிலையில், பொன். மாணிக்கவேல் ஓய்வு பெறவே, வேறு ஒரு அலுவலரை சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தமிழ்நாடு அரசு நியமித்தது. மீண்டும் அதில் தலையிட்ட உயர் நீதிமன்றம், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக பொன் மாணிக்கவேலை நியமித்தது.
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல் துறையைச் சேர்ந்த 66 பேர் மனு தாக்கல் செய்தனர். காவல் அலுவலர்களை பொன். மாணிக்கவேல் தரக்குறைவாக நடத்துவதாக மனுவில் புகார் தெரிவித்தனர். பொன். மாணிக்கவேல் தங்களுடையை விசாரணையில் தலையிட்டு, கொடுமைப்படுத்துவதாக காவல் துறையினர் மனுவில் குற்றம்சாட்டினர்.
அந்த மனுவில் பொன்.மாணிக்கவேலின் கீழ் தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும், தங்களை அவர் மதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும் தங்களுக்கு சரியான முறையில் விடுப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், அதிக அழுத்தம் கொடுக்கிறார் என்றும் குற்றம்சாட்டினர். இந்த வழக்கில் அதிக அழுத்தம் கொடுப்பதால், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். எனவே அவருக்கு அளித்துள்ள ஓராண்டு காலம் பணி நீட்டிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் காவல் துறையைச் சேர்ந்த 66 அலுவலர்களின் வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தது. அதை நீதிமன்றம் நிராகரித்திருந்த நிலையில் தற்போது அலுவலர்களின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.