தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹூ செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் 105 கோடியே 7 லட்சம் ரூபாய் பணமும், 227 கோடி 45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளும் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 159 தங்கக் கட்டிகள் கோவையில் நேற்று மட்டும் பிடிபட்டுள்ளது. இதன் எடை 145 கிலோ ஆகும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற வாகன சோதனையில் 37 லட்சம் ரூபாய், கடலூரில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு புகார்களின் பெயரில் அரசியல் கட்சியினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் தேர்தல் விதிமுறைகள் மீறி பிரசாரங்களின் போது பேசியிருந்தால், அது பற்றி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கலாம்.
தேர்தல் நேரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஏதும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பில்லை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம் தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
வருமானவரித் துறையில் 49 கோடி ரூபாய் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 150 கம்பனி படைகள் தேர்தல் பாதுகாப்புக்கு வரவுள்ளனர்.
மொத்தம் வரவுள்ள 160 கம்பனி படைகளில், மதுரையில் 8 கம்பனி படைகளும், தேனியில் 7 கம்பனி படைகளும், நெல்லையில் 6 கம்பனி படைகளும் தேர்தல் பணிக்காக அமர்த்தப்படவுள்ளனர்” என தெரிவித்தார்.