உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் கொடியை ஏற்றிக் கூடியிருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்புகளை வழங்கி, காக்கி சீருடை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ‘தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தேமுதிக சார்பில் மே தின வாழ்த்துக்கள் கூறிக்கொள்கிறேன். நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது சபாநாயகரும், தேர்தல் ஆணையமும்தான் முடிவு செய்ய வேண்டும்.
தேமுதிக சார்பில் நான்கு தொகுதிகளுக்குப் பரப்புரைச் செய்ய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் எந்தெந்த தொகுதிகளில் தேமுதிக பரப்புரை செய்வோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம். சாதி கலவரங்களைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டிய ஒன்று. இதைத் தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் முடிவுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற எதிர்க்கட்சியின் கருத்து குறித்த கேள்விக்கு, மே 23ஆம் தேதி எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்’ என்றார்.