அரசு திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை மத்திய அரசு கடந்த 2013 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
மத்திய அரசின் இந்த புதிய சட்டத்தில் இருந்து மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகிய சட்டங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு 105 (a) என்ற சட்ட பிரிவை சேர்த்து நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டத்தை கொண்டு வந்தது.
மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சட்டத்தில் இருந்தது போல, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த இந்த புதிய சட்டத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல் நிலங்களை கையகப்படுத்த கூடாது என்ற விதி இல்லை எனவும், நிலம் கையகப்படுத்தும் 6 மாதத்தில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதிகள் இல்லாததும் நில உரிமையாளர்களை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் விவசாயிகளின் வாதங்களை ஏற்று தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் தொடர்பான சட்டங்களை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.