தமிழ்நாட்டில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் வியாழக்கிழமை (நாளை) விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை உள்ளது.
இதனால் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 650 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இரண்டாம் நாளான இன்றும் 1,500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது.
இதுவரை 26 ஆயிரம் பேர் முன்பதிவு செய்ய்துள்ளதாக போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுகிழமை வெளியூர்களில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்ப வசதியாக கூடுதலாக 1,500 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருக்கிறது.