பாஜக-வில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி, அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிபிஐ கட்சியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தளி என்னும் பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஸ்ரீனிவாச ரெட்டி என்பவர் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி இன்னும் பல மாற்றுக் கட்சியிலிருந்து பலர் பாஜகவில் இணைய உள்ளனர்.
ஹைட்ரோ கார்பன், கெயில், கூடங்குளம் போன்ற திட்டங்களை வைத்து அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். மக்களின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றதிற்காக கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும், எதிர்க்கட்சிகள் சுயலாபத்திற்காக தவறாகப் பரப்புரை செய்துவருகின்றனர். ஒருவேளை அணுக்கழிவு குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலத்திலிருந்து எடுத்து வந்தால், அதை எதிர்க்கும் முதல் நபர் நானாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "காவி என்பது ஒரு நிறம். அதை எங்குப் பயன்படுத்தினாலும் அதற்குப் பின்பு பாஜக இருக்கிறது எனக் கூறுவது வியப்பாக உள்ளது. பல முறை இந்தியா அணிக்கும் மற்ற அணிக்கும் ஜெர்சி வண்ணம் மாற்றப்பட்டுள்ளது. மதுரை பாலத்திற்குக் காவி வண்ணம் பூசியதற்கு அது பாஜக ஆதரவு பாலம் எனக் கூறிவருகின்றனர். இதெல்லாம் ஒரு சில்லி விஷயம் என்பது என் கருத்து.
குடிநீர் பிரச்னை போக்க அரசாங்கம் இன்னும் பல நடவடிக்கை எடுக்கவேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு வருவதற்கான செலவினை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருப்பது தொடர்பாக, நான் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அந்த செலவை ரயில்வே ஏற்றுக்கொண்டு உதவ வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம், அவர் மீது தான் கொண்டுவந்துள்ளார். ஏனென்றால் அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. தன்மானத்தை பாதுகாத்துத்தான் திமுக-வில் தங்கத்தமிழ்ச் செல்வன் இணைத்துள்ளாரா எனக் கேள்வி எழுப்பினார். வருமானத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் தன்மானத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். சீமான் போன்றவர்கள் அறிவியல் சார்ந்து ஏதும் பேசமாட்டார்கள். சீமான் பேசுவதற்கு நான் பதில் சொன்னால் அவ்வளவுதான்’ என்று காட்டமாகத் தெரிவித்தார்.