சென்னை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ஏராளமான நரிக்குறவ இன மக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் சமூகம், பொருளாதாரம், கல்வி ஆகியவற்றில் பின்தங்கிய நிலையில் இருந்துவருகின்றனர். இந்நிலையில் திருமுல்லைவாயல் பகுதி அரிமா சங்கம் சார்பில் முதல்கட்டமாக நரிக்குறவ இன மக்களின் முன்னேற்திற்காக ஐந்து மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்தனர். அப்போது மாணவர்களை உற்சாகத்துடன் மாலை அணிவித்து வரவேற்றனர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மேலும் இப்பள்ளியில் புதிதாக 1.50 லட்சம் ரூபாய் செலவில் பொலிவுறு (ஸ்மார்ட்) வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் முதல்நிலைக் கல்வியை முழுமையாக அளிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் திருமுல்லைவாயல் பகுதி அரிமா சங்கத் தலைவர் ராஜ் மோகன், செயலாளர் பிரபு, துணைத் தலைவர் கமலநாதன், பள்ளி வளர்ச்சிக் குழு தலைவர் ஜெயக்குமார், ஆவடி நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் மோகனசந்தரி ஆகியோர் கலந்துகொண்டனர்.