அரியலூரில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் திருமாவளவன் திறந்துவைத்தார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முயற்சித்து வருகிறோம். மத்திய படஜெட்டில் ஏழை, எளிய, மலைவாழ் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பெண்களின் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. வளர்ச்சிக்கு வழிவகுக்காது, பெட்ரோல் டீசலுக்கு வரி உயர்த்தப்பட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வதோடு பண வீக்கத்தையும் ஏற்படுத்தும் எனக் கூறினார்
மேலும், நீதிமன்றத்திலேயே தமிழ்நாட்டிற்கான நீட் தேர்வு விலக்கை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. இனிமேலும் மத்திய அரசு உடன் மாநில அரசு உறவாட போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மட்டுமல்ல அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு புறந்தள்ளி உள்ளது கண்டிக்கதக்கது என கடுமையாக விமர்சித்தார்.