அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிலால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்துவருகின்றனா். இவா்கள் கல்லூரிக்குச் சென்று வர காலை, மாலை நேரங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.
மேலும், இதனால் கல்லூரிகளுக்குச் செல்ல தாமதம் ஏற்படுவதால், காலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை சரியாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனா்.
இதனிடையே இன்று காலை வழக்கம்போல் சிலால் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது வந்த அரசுப் பேருந்து ஒன்று நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலையில் கிடைந்த கட்டையை தூக்கி பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது வீசினர். இதில் அந்தக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்ததால் பேருந்து நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், மாணவா்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே கிராம மக்கள் பேருந்திற்கு புதிய கண்ணாடி வாங்கித் தருவதாக ஏற்றுக்கொண்டனா். பின்னர் மாணவர்கள் மற்றொரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றனா்.