அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக தமிழ்நாடு அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நீர்வள ஆதாரப் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, குடிமராமத்துப் பணிகள் குறித்து விரிவாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், இக்கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசன், சுகாதாரத் துறை இயக்குநர் ஹேமச்சந்த் காந்தி, கிராம அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பெரம்பலூர், குன்னம் வட்டம் சித்தளி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தா கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகள், அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் இக்கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவைகள் குறித்தும் கூறப்பட்டது. இந்த நிகழ்வில் கிராம திட்ட இயக்குநர், அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல், விருதுநகர் அருகே ரோசல்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில், அங்கு வந்த கிராம மக்கள் 15 ஆண்டுகளாக ரோசல்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லையெனக் கூறி கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
மேலும் அவர்கள், கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகக் கூறி, எந்த ஒரு திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும், கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு முறையாக அரசு அலுவலர்களே வருவதில்லை எனவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
எனவே, முறையாக சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டால் மட்டுமே கிராம சபைக் கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்வோம் எனக் கூறி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:
கிராம சபைக் கூட்டத்திற்கு காதில் பூ சுற்றி வந்த கிராம மக்கள்!