அரியலூர்: மிக்ஜாம் புயலால் பாதிக்கபட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க முதற்கட்டமாக 10,519 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு லாரி மூலம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி ரூ.8.67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், பால் பவுடர்கள், ரஸ்க், சேமியா, காபி தூள், அரிசி, கோதுமை, ரவா, ஆயில் மற்றும் குழந்தைகளுக்கான துணி, மெழுகுவர்த்தி, துண்டுகள், போர்வைகள், நாப்கின் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகள் மூலம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து, நேற்று இரவு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும், நிவாரணப் பொருட்கள் வழங்க விரும்பும் தன்னார்வலர்கள் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகத்தை அணுகி, நிவாரணப் பொருட்களை வழங்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: திருவாரூர் அருகே ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த அரசுப் பள்ளி மாணவர்!