அரியலூர்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99வது ஆண்டு துவக்க விழாவையொட்டி சீருடை அணிந்து பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் அரியலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக, ஜெயங்கொண்டம் நகரின் வேலாயுத நகர் ராஜேந்திர சோழன் திடலில் ஆரம்பித்த அணிவகுப்பு ஊர்வலம் பஸ் ஸ்டாண்ட் ரோடு, சன்னதி தெரு, கடைவீதி, நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக பேண்டு வாசித்தபடி நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ் மாநில சமூக நல நல்லிணக்க பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் குமரகுரு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பின்னர், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஜெயங்கொண்டத்தின் முக்கிய வீதிகள் வழியாக இசைவாத்தியம் முழங்க அணிவகுத்துச் சென்றனர். அந்த அணிவகுப்புப் பாதையில் மகளிர் மலர் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
அணிவகுப்பு ஊர்வலத்தில் பாரத மாதா, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் மற்றும் குருஜியின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டிருந்த அலங்கார ஊர்தி முன்னே செல்ல, பின்னால் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிவகுத்து சென்றனர். மேலும் இந்த ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் தேச பக்தர்கள் சீருடை அணிந்து பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த அணிவகுப்பு ஊர்வலமானது இறுதியாக ஜெயங்கொண்டம் பெருமாள் கோயிலுக்கு அருகே வந்து முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து பெருமாள் கோயில் அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மாநில சமூக நல நல்லிணக்க பொறுப்பாளர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார். முன்னதாக பெருமாள் கோயில் வளாக திடலில் ஆர்.எஸ்.எஸ் கொடியை ஏற்றி வைத்தனர்.
இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தவிர்க்கும் வகையில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏனெனில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பொதுக்கூட்ட மேடை அருகே, கல்வீச்சு நடைபெற்தால் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஈரோடு ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்தில் கல் வீச்சா? - நடந்தது என்ன?