அரியலூர் மாவட்டம், பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகளும் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொன்பரப்பி கிராமத்தில் தேர்தலையொட்டி நடந்த மோதலும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களும், அப்பகுதியில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும், இப்பிரச்னை குறித்து தொடக்கத்திலேயே உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தளவுக்குக் கொண்டு சென்றது முதலமைச்சர் பழனிசாமி அரசின் காவல்துறைதான்.
சாதியையும், மதத்தையும் அரசியலில் தொடர்புப்படுத்தினால் சமூக அமைதியும், மக்களின் நிம்மதியும் பறிபோய்விடும். தனிப்பட்ட சிலரின் அரசியல் லாபங்களுக்காக பொது அமைதி குலைக்கப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், இருதரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதோடு, இதனை மேலும் வளர்த்துக் குளிர்காய நினைக்கும் முயற்சிகளை அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.