அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, அடிக்காமலை, தென்கச்சி பெருமாள் நத்தம், மதனத்தூர், கூத்தங்குடி, அருள்மொழி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஐந்து ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா நெல் விதைக்கும் பணியை தற்போது விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் மழை பொழிவின் காரணமாகவும், அதிக நீர் வரத்தின் காரணமாகவும் கொள்ளிடத்தில் போதுமான நீர் வந்து கொண்டிருக்கிறது.
அந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு வந்ததை தொடர்ந்து விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் முதல் கட்டமாக நெல் விதைக்கும் பணியை தற்போது விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “ஆற்றில் இந்த ஆண்டு சரியான நேரத்தில் தண்ணீர் வந்ததால் குறித்த நேரத்தில் பயிர் செய்ய தொடங்கியுள்ளோம். அதே சமயம் பயிர் செய்யும் போது தட்டுபாடு இன்றி தண்ணீர் கிடைத்தால் இந்த ஆண்டு சிறப்பாக சாகுபடி செய்ய முடியும்” எனத் தெரிவித்தனர்.