அரியலூர்: இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசு எலி மருந்து மற்றும் ஆறு பூச்சிக்கொல்லிகளை அபாயகரமானதாக அறிவித்து, 60 நாட்களுக்கு விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இந்த பூச்சிக்கொல்லிகளை தயாரித்தல், இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகளான மோனோகுரோட்டோபாஸ், புரோபனபாஸ், அசிபேட், புரோப்பனபாஸ்+சைபர் மெத்திரின், குளோர்பைப்பாஸ்+சைபர் மெத்திரின், குளார்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளும் ரேட்டால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்ற எலி மருந்தான 3 சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த பூச்சிக்கொல்லிகளை உட்கொள்வதால் உயிரை காப்பாற்ற முடியாத அளவிற்கு அபாயகரமானதாக உள்ளது. இவை பெரும்பாலும் தற்கொலைக்கு பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால், உடனடியாக விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை பூச்சிக்கொல்லி விற்பனையாளர்கள், இந்த 6 தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளை இருப்பு வைத்தல், காட்சிப்படுத்துதல், விற்பனை செய்வது மற்றும் ரேட்டால் என்ற எலி மருந்தை பெட்டி கடை, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், பூச்சிக்கொல்லி சட்டம் 1968 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள் 1971இன்படி பூச்சிக்கொல்லி உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் எலிபேஸ்டை சாக்லேட் என நினைத்து சாப்பிட்ட 3 வயது குழந்தை 3 நாட்களாக சிகிச்சைன் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை ஏன்?- அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!