அரியலூர் மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள அறக்கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. 60 வயதான இவர், கேரளாவில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். அம்மாநிலத்தில் கரோனா பரவல் அதிகமானவுடன் கேராளவில் இருந்து புறப்பட்டு, தனது சொந்த ஊரான கடம்பூருக்கு நடந்தே வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி நாராயணசாமிக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததால் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நாராயணசாமியின் ரத்தம், சளி ஆகியவை சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மனஉளைச்சலுடன் நாராயணசாமி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (10/4/2020) இரவு நாராயணசாமியின் பரிசோதனை முடிவுகள் வந்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
ஆனால் இதனை நாராயணசாமி அறிந்துகொள்வதற்கு முன்பே தான் தங்கியிருந்த அறையில் தன்னுடைய துண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியலூர் தாசில்தார் சந்துரு, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.