காவிரி உபரி நீர் பாசனம் மூலம் அரியலூர் மாவட்டத்தின் டெல்டா பகுதிகளான தா.பழூர், திருமானூர் ஒன்றியத்தில் சம்பா பட்டம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கூடுதலாக பொழிந்த மழையால் சம்பா பட்டம் நெல் சாகுபடி அமோக விளைச்சலை கண்டது. இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை விற்பனை செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்ற விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, போதிய கோணிபைகள் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டு அறுவடைச் செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அம்மாவட்டத்தின், 21 நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றது. குறிப்பாக ஸ்ரீபுரந்தான் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதும் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் தேங்கி கிடக்கிறது.
இது குறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் தருமராஜன் கூறுகையில், “நெல் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளிடம் கோணிப் பைகளை தைப்பதற்குச் சணல் வாங்கி கொடுக்க வேண்டிய நிலை விவசாயிகளுக்கு உள்ளது. இரண்டு சிற்பங்களை தனியாரிடம் விற்றால் ஒரு விவசாயிக்கு 400 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.
வேறு வழியின்றி நெல் மணிகளைப் பாதுகாக்க முடியாத நிலைக்கு சிலர் தனியாரிடமும் விற்று வருகின்றனர். தற்போது அனைத்து பகுதிகளிலும் சுமார் 80 % நெல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது. இதனால் ஒருபக்கம் அறுவடைக்கு தயாரான கழனிகளும் அறுவடைக்கு வழியின்றி இருக்கின்றன.
தற்போது கோடை காலம் துவங்கும் நிலையில் கோடை மழை வந்தால் விவசாயிகளின் நெல் அனைத்தும் மழையில் நனைந்து வீணாய் போகும். இதனால் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 10 நாட்களுக்குள் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், நெல் கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
கொள்முதல் செய்த நெல்களை உடனடியாக ஏற்றுமதி செய்ய அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறுகிறார்.
இது குறித்து நெல் கொள்முதல் நிலைய அலுவலர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவால் ஒரு நாளைக்கு 800 பை சாக்கு முட்டைக் மேல் வாங்கக்கூடாது. இன்னும் கடந்த ஒருவாரத்திற்கு எடுப்பதற்கு நிதியும், கோணிபைகளும், சணலும் இல்லை. ஆகையால் நெல் கொண்டுவந்த விவசாயிகள் அவரவர் பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
சாலையில் நெல் கொட்டி கிடப்பதால் இப்பகுதியில் அரியலூர், முத்துவாஞ்சேரி, காசாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து விபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : காவல் நிலையத்திற்கு விசிட் அடித்த எல்கேஜி, யுகேஜி பள்ளிக் குழந்தைகள்!