அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியான திருமானூர், தா.பழூர் ஆகிய இரண்டு ஒன்றியங்கள் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஏரி, போர்வெல் பாசனத்தின் மூலம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். டெல்டா பகுதிகளில் முன் பருவத்தில் நெல் சாகுபடி செய்யப்பட்டதால் அதன் அறுவடை கடந்த மாதமே பெருமளவில் முடிவடைந்தது.
இந்நிலையில் ஏரி பாசனத்தின் மூலம் விவசாயிகள் கால தாமதமாகவே சாகுபடியை செய்ததால் இம்மாதம் அறுவடை தொடங்கியது. நிலத்தின் அளவு சிறு சிறு பகுதியாக இருப்பதால் கூலி ஆட்களை வைத்து நெல் அறுவடை செய்யப்படுவது வழக்கம். ஆனால், தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதால் கூலி ஆட்களைக் கொண்டு நெல்லை அடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் தங்களது குடும்பத்தினரை வைத்து நெல் பயிர்களை அறுத்த கட்டுகளாக கட்டினர். ஆனால், அதனை அடிப்பதற்கான கூலியாட்கள் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெற்கதிர் அடிக்கும் இயந்திரம் ஒப்பந்தத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தற்போது நெல் அடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இது குறித்து விவசாயி கூறுகையில், “144 தடை உத்தரவால் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை எங்கள் குடும்பத்தினரை கொண்டு அறுவடை செய்து கட்டுகளாக கட்டிவிட்டோம். ஆனால், அதனை அடிப்பதற்கான கூலி ஆட்கள் கிடைக்காததால் பல நாள்கள் வயலிலேயே கிடந்தது.
இதனால், மாவட்ட நிர்வாகம் நெற்கதிர் அடிக்கும் இயந்திரத்தை எங்கள் பகுதிக்கு அனுப்பி, நெற்கதிர்களை அடித்துக்கொள்ள உதவி செய்திருக்கிறது. இதற்கான முழு செலவையும் அரசே ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒரு ஏக்கர் நெற்கதிர்களை அடிக்க சுமார் நான்காயிரம் ரூபாய் செலவாகும். ஆனால் தற்போது இந்த நான்காயிரம் ரூபாயை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகளுக்கு வர பிரசாதமாகும்” என்றனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: சாகுபடி செய்த குடைமிளகாயை சாலைகளில் கொட்டும் விவசாயிகள்!