அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் பகுதிகளில் பிப்ரவரி 2ஆம் வாரத்தில் பல்வேறு கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் த.ரத்னா தெரிவித்தார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சி தொடர்பான பணிகளை சனிக்கிழமை பார்வையிட்ட அவர், “தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் கீழடி ஆதிச்சநல்லூர், சிவகலை, கொடுமலையை தொடர்ந்து, தற்போது கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மேலும், இப்பகுதிகளில் 1980, 81, 85, 87, 91 ஆகிய ஆண்டுகளில் பலகட்டமாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 31 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டதில், கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ராஜேந்திரசோழன் ஆண்ட பகுதிகளான மாளிகைமேடு, மண்மலை, குருவாலப்பர்கோவில், பொன்னேரி மதகு உள்ளிட்ட பகுதிகளில், பானை, கூரை ஓடுகள், இரும்பு ஆணி, அலங்காரம் செய்யப்பட்ட கற்கல், வளையல் துண்டுகள், மணிகள், யானை தந்தத்தால் ஆனப் பொருள்கள், நாணயங்கள், மண்பாண்ட ஓடுகள், சீனநாட்டு ஓடுகள் உள்ளிட்டவைகள் கண்டெடுக்கப்பட்டன.
இப்பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் ஆள்இல்லாத விமானம் மூலம் தரைப்பகுதிகளில் அமைந்துள்ள பொருள்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2ஆவது வாரம் முதல் பல்வேறு கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளன. இதன்மூலம் அரியலூர் மாவட்டத்தின் தொன்மையும், இப்பகுதியில் வாழ்ந்த நமது முன்னோர்கள் குறித்த வரலாறும் கிடைக்கப்பெறும்” என்றார்.