அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) தமிழ்குடிமகன் (34). இவர் சென்னை ராமாபுரத்தில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பூக்கடையிலிருந்து தரமணி ஸ்ரீ ராம் நகருக்கு ஆட்டோவில் சவாரிக்காகச் சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலுக்குச் சென்றவர் சிறிது நேரத்திலேயே உடம்பில் தீப்பற்றி எரிந்த நிலையில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, ஆட்டோ ஓட்டுநரை ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பாட்டிலில் இருந்த பெட்ரோலை ஆட்டோவில் ஊற்றியபோது ஓட்டுநர் சிகரெட் பிடித்துக்கொண்டு இருந்ததால் அதில் தீப்பொறி பட்டு ஆட்டோ டிரைவர் மீது தீப்பற்றி உள்ளது என முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், இந்த விபத்து தற்கொலையல்ல திட்டமிட்ட கொலை எனவும், இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி தமிழ்குடிமகனின் சித்தப்பா பழனிவேல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்ததில் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் ஆட்டோவை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு உணவகத்தில் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து உணவகத்திலிருந்து உடலில் தீப்பற்றி எரிந்தபடி சாலையில் விழுந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் ஊரான மணக்கால் ஊருக்கு அடுத்த ஊரைச் சேர்ந்தவர் தான் உணவகத்தை நடத்தும் வெண்ணிலா, முருகேசன். மேலும், வெண்ணிலா முருகேசனுடன் திருமணம் நடப்பதற்கு முன் தமிழ்குடிமகனை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ்குடிமகன் வெண்ணிலாவை மிரட்டுவதற்காக, வெண்ணிலாவை அழைத்து வர முடியாத பட்சத்தினால் தற்கொலை செய்து கொள்வதற்காக உணவகத்திற்கு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிகளிடம் அத்துமீறி நடந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது