அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா (வயது 90). இவருக்கு ஐந்து மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர்.
இவரது கணவர் ஜெகநாதன் 40 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். இவருக்கு ரங்கராஜன் (வயது 68), மனோகர் (வயது 58), கஜேந்திரன் (வயது 50) ஆகிய மகன்கள் திருப்பூரிலும், இளங்கோவன் (வயது 55), வீரராகவன் (வயது 53) ஆகியோர் கவரப்பாளையத்தில் கூலி வேலையும் செய்து வருகின்றனர். மூன்று மகள்களுக்கும் சுற்றுவட்ட கிராமத்திலேயே உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக திருப்பூரில் மகன்களுடன் இருந்துவிட்டு, பின் தீபாவளிக்கு இரண்டு நாள்கள் முன்பாக கவரப்பாளையத்தில் திருப்பூரில் இருந்த மகன்கள் கொண்டு வந்து விட்டுச்சென்று விட்டனர்.
அங்கு யார் வீட்டுக்கும் செல்லாமல் சாலையில் சுற்றிவிட்டு அங்கிருந்து நேராக ஆண்டிமடம் - விருத்தாசலம் முக்கிய சாலைக்கு வந்துள்ளார். அங்கு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
சமூக ஆர்வலர்கள் சிலர் அவரை மீட்டு ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற உதவினர், அதைத் தொடர்ந்து கவரப்பாளையத்தில் வசிக்கும் மகன் டைலர் இளங்கோவன் தாயை அழைத்துச் சென்றார்.
அப்போது அவரது மனைவிக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாயை பராமரிக்க இயலாமல் விட்டுவிட்டார். இதனால் சுலோச்சனா உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறவில்லை. இதற்கிடையே, மீண்டும் கவரப்பாளையம் பேருந்து நிலையத்தில் அனாதையாக அவர் கிடந்துள்ளார்.
இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் அரியலூர் எஸ்பி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆண்டிமடம் காவல்துறையைச் சேர்ந்த மணிகண்டன் தனது செலவில் அந்த மூதாட்டிக்கு உடை வாங்கிக் கொடுத்து ஆறுதல் கூறினார். தகவலறிந்து வந்த தாசில்தார் குமரய்யா 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் கொடுத்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஜெயங்கொண்டத்தில் டிஎஸ்பி மோகன்தாஸ் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார்.
மூதாட்டி சுலோச்சனா தன்னிடமிருந்த நான்கரை ஏக்கர் நிலத்தை மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தும் அவரை கவனிக்க பிள்ளைகள் இல்லை என்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : இந்த வயதில் மூதாட்டி செய்யும் வேலையை பாருங்க! - சிசிடிவி காட்சிகள் இணைப்பு