பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் ரயில்நிலையம் அமைந்துள்ளது. ரயில் நிலையம் வழியாக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்குத் தினந்தோறும் ரயில்கள் சென்றுவருகின்றன. அவ்வாறு ரயில்கள் சென்றுவரும்போது, ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டுவந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதுமட்டுமின்றி அந்த வழியாகத்தான் அரியலூர் மருத்துவமனைக்கும் செல்ல வேண்டும் என்பதால், நோயாளிகளும் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனையடுத்து மேம்பால பணிகளுக்காக 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி கேட் மூடப்பட்டு 45. 34 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன இப்பணிகள் 43 மாதங்களுக்குப் பிறகு முடிவடைந்து. இதனையடுத்து கடந்த எட்டாம் தேதிதான் (ஜூன் 8) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாகத் திறந்துவைத்தார். இணைப்புப் பாலம் இல்லாமல் உலகத்திலேயே அரியலூரில்தான் அவசர, அவசரமாக மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இன்றளவும் மருத்துவமனைக்குச் செல்ல தாமதம் ஏற்படுவதாகவும் அரியலூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
குறிப்பாக நோயாளிகள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டி தான் மேம்பாலம் கட்டப்பட்டது. ஆனால் பாலம் திறக்கப்பட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நுழைவுவாயில் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது.
அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் இந்த வழியாகத்தான் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதனால் இணைப்பு சாலை இல்லாததால் தற்போது இருக்கும் சாலையில் செல்ல வேண்டியுள்ளது. அதில், மேம்பாலத்தின் கீழ் உள்ள இணைப்புச் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், இணைப்புச் சாலையை விரைவில் போட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்டவற்றால் மேம்பால இணைப்புச் சாலை பணி தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அவசரமாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்திற்கு, இணைப்புச் சாலைகள் விரைவாகப் போடப்பட்டு பொதுமக்களையும் நோயாளிகளையும் அரசு காக்க வேண்டும் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...அடிப்படை பணிகளை மேற்கொள்ள நிலுவைத் தொகை கேட்டு மனு