அரியலூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவக்காற்றால் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. அதன் வகையில், நேற்று அரியலூர் மாவட்டமான ஜெயங்கொண்டம், செந்துறை, உடையார்பாளையம், திருமானூா் ஆகிய பகுதியில் நல்ல மழை பெய்தது. இந்த மழையால் அரியலூரின் முக்கிய ஏரியான பட்டுநூல்காரன் ஏரிக்கு, தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியானது விவசாயிகளுக்கு பெரிதும் பயன்பாட்டில் இருந்துவருகிறது. இந்நிலையில், இந்த ஏரியில் வடிகால் வசதியில்லாததால் நேற்று பெய்த மழையால், நீர்வரத்து அதிகமாகி ஏரி நிரம்பியது. இதனால், கரை உடைந்து நீர், மழையாற்றில் கலந்து வீணாகிவருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தப் பகுதிகளின் விவசாயத் தேவைக்கு இந்த ஏரியின் நீர் மிகவும் பயனுள்ளதாக இருந்துவருகிறது. ஆனால், இந்த ஏரிக்கு வடிகால் வசதி இல்லை. வடிகால் வசதி அமைக்கக்கோரி அரசு அலுவலர்களிடம் பலமுறை நேரில் மனுவாக அளித்தும், முறையீட்டும் வந்தோம்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம்காட்டினர். அவர்களின் மெத்தனப் போக்கால், தற்போது ஏரி உடைந்து, எதற்கும் பயன்படாமல் நீர் வெளியாகி வீணாகிவருகிறது. இனிமேலாவது அரசு அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.