அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் தலைவராக அதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்தத் திட்டத்தின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், சென்ற இரண்டு ஆண்டுகளாக அதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ், தலைவராக நீடித்து வருகிறார்.
அவரை மாற்றி புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என்று பாமகவினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அரசு அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் பாமக மாவட்டச் செயலாளர் உலக சாமிதுரை தலைமையில், வேளாண்மை துறை உதவி இயக்குநரிடம் பாமகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர், அரசு அலுவலர்களை உள்ளே வைத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜ்குமார், போராட்டக்காரர்களை சமரசம் செய்து அலுவலகத்தை திறக்க வழிசெய்தார். பின்னர் காவல் துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை செய்து விவகாரத்தை தற்காலிகமாக முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு போட்ட அதிமுக!