கரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஜெர்மன் கால்பந்து கோப்பை தொடர், கடந்த ஜூன் மாதம் முதல் பார்வையாளர்களின்றி நடைபெற்றுவந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பெயர்ன் முனிச் அணி, லெவர்குசென் அணியுடன் மோதியது.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெயர்ன் முனிச் அணியின் அலபா ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்திலும், நாப்ரி 24ஆவது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் சிறப்பாகச் செயல்பட்ட பெயர்ன் முனிச் அணியின் லெவாண்டோவ்ஸ்கி ஆட்டத்தின் 53 மற்றும் 83 நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து, அணியின் வெற்றியை உறுதிசெய்தார். பின்னர் ஆட்டத்தின் இறுதிவரை போராடிய லெவர்குசென் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
இதன்மூலம் ஆட்டநேர முடிவில் பெயர்ன் முனிச் அணி 4-2 என்ற கோல் கணக்கில் லெவர்குசென் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், இது பெயர்ன் முனிச் அணி வெல்லும் 20ஆவது ஜெர்மன் கோப்பை சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.