டோக்கியோ: 2020 டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெற்றது. இத்தொடரில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் பங்கேற்று ஏழு பதக்கங்களை வென்றனர். நீரஜ் சோப்ரா தடகளப் பிரிவான ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று சிறப்பித்தார்.
சம்மர் ஒலிம்பிக் முன்னதாக நிறைவடைந்த நிலையில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் தொடர் நேற்று (ஆக. 24) தொடங்கியது. வரும் செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் ஒன்பது விதமான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
முழு ஆதிக்கம்
இந்நிலையில், டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சி-4 பிரிவில் நடைபெற்ற தொடக்க போட்டியில் இந்திய வீராங்கனை பவினாபென் ஹஸ்முக்பாய் படேல், சீன வீராங்கனை சூ யிங் உடன் மோதினார்.
2008 பெய்ஜிங், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற சூ யிங், இப்போட்டியில் தன்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தி ஆட்டத்தை தன்வசம் வைத்திருந்தார். மொத்தமாக 18 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில், 11-3, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் பவினா படேலை வீழ்த்தினார்.
அடுத்த போட்டி
இதையடுத்து, பவினா படேல் நாளை (ஆக. 26) நடைபெறும் குரூப் பிரிவின் கடைசிப்போட்டியில் இங்கிலாந்தின் மேகன் ஷாக்லெட்டனை சந்திக்கிறார். முன்னதாக, இன்று நடைபெற்ற பெண்கள் தனிநபர் சி-3 டேபிள் டென்னிஸ் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சோனல்பென் மதுபாய் படேல் தோல்வியடைந்தார்.
பாரா ஒலிம்பிக்கின் இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ள தடகளப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்குகின்றன.
இதையும் படிங்க: TOKYO PARALYMPICS: டோக்கியோ சென்றது 12 பேர் கொண்ட இந்திய அணி!