டோக்கியோ: டோக்கியா ஒலிம்பிக் போட்டியில், பி.வி. சிந்து வெள்ளி அல்லது தங்கப்பதக்கத்தைப் பெறுவார் என்று பெரும்பாலனோர் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு முடிவுகட்டியவர் தைவான் வீராங்கனை தாய் சூ என்பவர்தான். கடந்த சனிக்கிழமை நடந்த போட்டியில், 21-18, 21-12 என்ற சேட் கணக்கில் பி.வி. சிந்துவை அவர் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் சீன வீராங்கனை சென் யூஃபியை அவர் எதிர்கொண்டார். தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினாலும், சென் யூஃபியிடம் அவர் தோல்வியைத் தழுவினார். தோல்வியை தழுவிய சமயத்தில், சிந்து தனக்கு கூறிய ஆறுதல் வார்த்தைகள் கண்ணீரை வரவழைத்ததாக உருக்கமான பதிவொன்றை தாய் சூ இட்டுள்ளார்.
தாய் சூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிந்துவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, "இறுதிப்போட்டி முடிந்தபின்பு, எனது ஆட்டத்தில் நான் திருப்தி அடைந்தேன். பின்னர், சிந்து ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டு 'நீங்கள் சங்கடமாக இருக்கிறீர்கள், நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். ஆனால், இது உங்களுடைய நாள் அல்ல' என்று சொன்னார்.
அவர் ஊக்கப்படுத்திய விதம் என்னை அழவைத்தது. மிகவும் கடினமாக முயற்சி செய்து விளையாடியதால் உண்மையில் மிகவும் வருத்தமாக இருந்தது எனக்கு. உங்கள் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சாம்பியன்கள் அவ்வளவு எளிதாக ஓய்ந்துவிட மாட்டார்கள்' - பி.வி. சிந்துவின் கதை...!