டோக்கியோ: பாரா ஒலிம்பிக் 2020 போட்டிகள் இன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கி, செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இது மாற்றுத் திறனாளிகளுக்கான 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியாகும்.
இப்போட்டிகளில், இதுவரை இல்லாத அளவில் 54 இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்குத் தமிழ்நாட்டு பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு கேப்டனாகத் தலைமை தாங்குகிறார்.
இவர் தலைமையில் நேற்று தேசியக்கொடியை ஏந்தி, இந்திய வீரர்கள் அணிவகுத்துச் செல்ல இருந்தனர். ஆனால், விமான பயணத்தின்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால், மாரியப்பன் தங்கவேலு உள்பட இந்திய அணியைச் சேர்ந்த ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
போட்டியில் கலந்துகொள்வதில் சிக்கலா?
இதன் காரணமாக, தேசியக்கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு தேக் சந்த் பெற்றார். இதனிடையே மாரியப்பன் போட்டியில் கலந்துகொள்வாரா என்று குழப்பம் ஏற்பட்டது.
இது குறித்து ஒலிம்பிக் நிர்வாகம், கரோனா பரிசோதனையில் மாரியப்பன் தங்கவேலுக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் போட்டியில் கலந்துகொள்வார் எனத் தெரிவித்துள்ளது.
மாரியப்பன் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் ஆகஸ்ட் 31ஆம் தேதி கலந்துகொள்கிறார். முன்னதாக இவர், 2016ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டி உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாரா ஒலிம்பிக்: இந்திய வீரர்களுக்கு விராட் கோலி வாழ்த்து