டோக்கியோ: இந்திய மகளிர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணியிடம் இன்று (ஆக.6) தோல்வியடைந்தது.
பதக்கம் வெல்லவில்லை என்றாலும், மக்களின் இதயத்தை வென்றுவிட்டார்கள் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இந்திய மகளிரணிக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
கோடிக்கணக்காணோருக்கு முன்னுதாரணம்
இந்நிலையில், பிரதமர் மோடி, இங்கிலாந்துக்கு எதிரான ஹாக்கி போட்டிக்குப் பிறகு இந்திய வீராங்கனைகளுடன் அலைபேசி வாயிலாக உரையாடினார்.
அப்போது பேசிய அவர், " அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக பல தியாகங்களை செய்து இந்த இடத்திற்கு வந்துள்ளீர்கள்.
கடின உழைப்பும், வியர்வையும் உங்களுக்கு பதக்கம் பெற்றுத் தரவில்லை என்றாலும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பெண்களுக்கு பெரும் உத்வேகத்தை இந்நிகழ்வு அளித்துள்ளது. உங்கள் அணிக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
பின்னர் வந்தனா கட்டாரியா, சலீமா ஆகியோரின் ஆட்டத்தை மோடி பாராட்டினார். சில தினங்களுக்கு முன்னர், வந்தனா கட்டாரியாவின் குடும்பம் சாதி ரிதீயிலான அடக்குமுறைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி உரையாடிக் கொண்டிருந்தபோதே, வீராங்கனைகள் தோல்வியை எண்ணி உடைந்து அழுதனர்.
நவ்னீத் கவுருக்கு 4 தையல்
வீராங்கனைகளின் கண்ணீரை உணர்ந்த பிரதமர் உடனடியாக, "யாரும் கண்ணீர் சிந்த வேண்டாம். நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். உங்களின் போராட்டத்தால்தான் பல ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் அடையாளமான ஹாக்கி மீண்டு எழுந்துள்ளது" என்றார்.
மேலும், ஆட்டத்தின்போது காயமடைந்த நவ்னீத் கவுரை நலம் விசாரித்தார்.
அதற்குப் பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால், "அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டு, நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும், உங்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி" என்றார்.
இதையும் படிங்க: சிறப்பாக ஆடிய ஹாக்கி பெண்கள் அணி குறித்து பெருமைகொள்வோம் - மோடி